NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமைச்சர் அலி சப்ரி – சாணக்கியன் எம்.பிக்கு இடையில் கடும் வாக்குவாதம்!

இராஜாங்க அமைச்சர் அலி சப்ரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்துக்கும் சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தனது உரையின் போது தன்னையும் அவரது குடும்பத்தினரையும் தரக்குறைவான வார்த்தையைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினருக்குப் பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திற்குப் புறம்பான வார்த்தைகள் ஏதும் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் அவ்வாறாயின் அறிக்கையை மீளப் பெறுவதாகவும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தாம் ஒருபோதும் இனவாத அரசியலில் ஈடுபடமாட்டேன் என தெரிவித்தார்.

அமைச்சர் அலி சப்ரி பயன்படுத்திய பல வார்த்தைகளை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்ததோடு, அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்களை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குவதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

Share:

Related Articles