NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி முன்னிலை பெற்றது.

இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ஓட்டங்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 48.5 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ஓட்டங்களை பெற்று வென்றது.

முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தில், அதிகபட்சமாக ஹேரி புரூக் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 71 ஓட்டங்கள் சோ்க்க, ஜாக் கிராலி 48, ஃபில் சால்ட் 45, சாம் கரன் 38, வில் ஜேக்ஸ் 26, பென் டக்கெட் 20 ஓட்டங்கள் பெற்று வெளியேறினா்.

லியம் லிவிங்ஸ்டன் 17, ரெஹான் அகமது 12, கஸ் அட்கின்சன் 4, கேப்டன் ஜோஸ் பட்லா் 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ரொமேரியோ ஷெப்பா்ட், குடாகேஷ் மோட்டி, ஓஷேன் தாமஸ் ஆகியோா் தலா 2, அல்ஜாரி ஜோசஃப், யானிக் காரியா ஆகியோா் தலா 1 விக்கெட்டை பெற்றார்.

அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்டத்தில் அலிக் அதானஸி 66, ரொமேரியோ ஷெப்பா்ட் 48, பிராண்டன் கிங் 35, ஷிம்ரன் ஹெட்மயா் 32 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா். கீசி காா்டி 16, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில் அணித்தலைவர் ஷாய் ஹோப் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 109, அல்ஜாரி ஜோசஃப் 2 ஓட்டங்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலா்களில் கஸ் அட்கின்சன், ரெஹான் அகமது ஆகியோா் தலா 2, பிரைடன் காா்ஸ், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

Share:

Related Articles