NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா Vs பாகிஸ்தான் : தொடரும் முரண்பாடு !

2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. குறித்த அட்டவணைகள் வெளியாக முன்பு தொடக்கம் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் பல்வேறு முரண்பாடுகள் நிலவி வருகின்றன.


இந்நிலையில் ஒக்டோபர் 15 ஆம் திகதி தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்இ 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள், கடைசி இறுதிப்போட்டி என்று நவம்பர் 19ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதற்காக 10 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி தரப்பில் சென்னையில் நடக்கவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை பெங்களூருவுக்கும், பெங்களூருவில் நடக்கவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை சென்னையிலும் மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பதில் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசின் அனுமதி அவசியமாகும்.

2016ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரசின் அனுமதியோடு தான் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடியது.
அதேபோல் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவோம் என்ற ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கையெழுத்திட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அதனால் உலகக்கோப்பைத் தொடர் பாகிஸ்தான் அணியை உள்ளடக்கிய 10 நாடுகள் பங்கேற்கும் தொடராகவே நடத்தப்படும்.

அனைத்து நாடுகளின் விதிகளையும் நாங்கள் மதிக்கிறோம். அதனால் நிச்சயம் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் பங்கேற்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் ஒக்டோபர் 15ஆம் திகதி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 1.32 லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள மைதானம் என்பதால், இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles