NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் பாதிக்கு மேற்பட்டோர் வறுமையில் வாடுகின்றனர்: ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சி!


இலங்கையில் 55.7% மக்கள் பல் பரிமாண குறியீட்டளவிற்கு அமைய வறுமையில் பலவீனமான நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP) இலங்கை தொடர்பிலான தனது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

நாட்டில் அன்னளவாக பத்தில் ஆறுபேர் ஏதோ ஒரு வகையில் வறுமையின் பிடியில் இருப்பதாக அந்த அறிக்கை  கூறுகிறது. 12 காரணிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்விற்கு அமைய, அவர்கள் குறைந்தது மூன்று அம்சங்களில் பலவீனமாக பின்னடைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் 12.34 மில்லியன் தனிநபர்களில் கணிசமான அளவில், அதாவது 10.13 மில்லியன் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்வதாக கூறும் அந்த அறிக்கை, அதிலும் குறிப்பாக அவர்கள் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வாழ்வவதாக தரவுகளுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக மலையக பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகளவான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிராமங்களில் காணப்படும் இந்த பல பரிமாண குறியீட்டிற்கு அமைய வறுமை அல்லது பாதிப்புகளுக்கு அடிப்படை காரணிகளாக கடன் சுமை, இயற்கை பேரழிவுகளை தாக்குபிடிக்க முடியாத நிலை மற்றும்  நீராதாரங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஆகியவை காணப்படுகின்றன.

தேசிய அளவில் கடன் பிரச்சினை, இயற்கை பேரழிவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாத சூழலிற்கு அப்பால், பாடசாலைக்கு செல்லும் நாட்கள் ஆகியவை முக்கியமான காரணிகளாக காணப்படுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், அனைத்திலும் பார்க்க வீட்டுக்கடனே மிகப்பெரும் பலவீனம் அல்லது பாதிப்பாக உள்ளது.

நாட்டிலுள்ள மூவரில் ஒருவர் (33.4%) உணவு, வைத்திய பராமரிப்பு, கல்வி ஆகியவைகளுக்காக தம்மிடமிருக்கும் நகைகளை அடகு வைப்பது அல்லது விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் மூலம் அவர்கள் மேலும் பாதிப்படைந்து பலவீனமான நிலைக்குச் செல்கின்றனர் என்கிறது அந்த அறிக்கை.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடன் சுமைகள் மேலும் மோசமடைந்து வறுமை நிலை அதிகரித்துள்ளதாகவும், கடன்சுமை காரணிகளுக்கான தரவுகள் எடுத்துக்காட்டுவதாகவும் ஐ நா அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் சுமார் அரைவாசி மக்கள் இயற்கை பேரழிவை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இல்லை. பருவநிலை மாற்றம் காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன. அவ்வகையில் இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள மக்கள் தயார் நிலையில் இல்லாததால், அது அவர்களை மேலும் பலவீனமானவர்களாக காட்டுகிறது.  

ஆண், பெண் இருபாலர்களின் பாடசாலை ஆண்டுகளும் இந்த பல பரிமாண பாதிப்புக்கு மூன்றாவது முக்கிய காரணியாக உள்ளது. எனவே இருபாலர்களின் கல்வி மட்டங்கள் மேம்பட உடனடியாக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது எனவும் அந்த ஆய்வறிக்கையின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

 அதேபோன்று அன்றாட பயன்பாட்டிற்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் 35.6% சிரமப்படுகின்றனர், எனவே அது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தப்பட்டு பரந்துபட்டளவில் மக்களுக்கு சிரமமின்றி நீர் ஆதாரங்கள் கிடைப்பதற்கு வழி செய்யப்பட வேண்டும் என்வும் பரிதுரைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, நுவரெலியா, புத்தளம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மூவரில் இருவர் அல்லது மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்த பல பரிமாண குறியீட்டளவின்படி வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படியான நெருக்கடிகளிலிருந்து அந்த மக்களை மீட்டெடுக்கவும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சி அமைப்பு சில பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளது. மேலும் அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நீண்டகால அடிப்படையில் நிலைத்திருக்க கூடியவைகளாக இருக்க வேண்டும் எனவும் அந்த பரிந்துரைகள் வலியுறுத்துகின்றன.

இலங்கை எதிர்காலத்தில் மேலும் பாதுகாப்பாகவும் நீடித்திருக்கும் ஸ்திரத்தன்மையும் கொண்ட நாடாக இருக்க வேண்டுமாயின், இந்த பிரச்சினையின் பன்முகத்தன்மை, அதிலுள்ள சிக்கல்கள் ஆகியவற்றை புரிந்துகொண்டு, அது தொடர்புடையவர்கள் மற்றும் பன்னாட்டு பங்குதாரர்கள் ஆகியவர்களுடன் இணைந்து செயற்பட்டு இலக்கு வைத்த வகையில் திட்டங்களும் உத்திகளும் வகுக்கப்படுவது அவசியமாகிறது என பரிந்துரைக்கும் அந்த அறிக்கை, அதன் மூலம் ஆபத்துக்களை குறைத்து, உறுதிப்பாட்டை அதிகரிக்க கூட்டு முயற்சி அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது. 

Share:

Related Articles