NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐசிசி உலகக் கிண்ண தகுதிகான் போட்டியில் அயர்லாந்து 138 ஓட்ட வெற்றி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக புலாவாயோ அத்லெட்டிக் கழக விளையாட்டரங்கில் நேற்று (27) நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண தகுதிகான் பி குழு போட்டியில் அயர்லாந்து 138 ஓட்ட வெற்றியை ஈட்டியது.

ஏற்கனவே ஸ்கொட்லாந்திடமும் இலங்கையிடமும் தோல்வி அடைந்ததால் சுப்பர் 6 வாய்ப்பை இழந்திருந்த அயர்லாந்துக்கு கடைசிப் போட்டியில் கிடைக்கப்பெற்ற வெற்றி ஆறுதலாகவே அமைந்துள்ளது.

கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, முன்வரிசை வீரர்களின் அதிரடிகளின் பலனாக 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 349 ஓட்டங்களைக் குவித்தது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அயர்லாந்து பெற்ற இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

நியூஸிலாந்துக்கு எதிராக டப்ளினில் கடந்த வருடம் 9 விக்கெட்களை இழந்து பெற்ற 359 ஓட்டங்களே அயர்லாந்தின் அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

மொத்த எண்ணிக்கை 41 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் அண்டி மெக்ப்றைன் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆனால், போல் ஸ்டேர்லிங், அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 184 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். தொடர்ந்து ஹெரி டெக்டருடன் மேலும் 57 ஓட்டங்களை 3ஆவது விக்கெட்டில் போல் ஸ்டேர்லிங் பகிர்ந்தார்.

134 பந்துகளை எதிர்கொண்டு அதரடியாக ஓட்டங்களைக் குவித்த போல் ஸ்டேர்லிங் 15 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக 162 ஓட்டங்களைக் குவித்தார்.

அண்டி பெல்பேர்னி 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 66 ஓட்டங்களையும் ஹெரி டெக்டர் 33 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களையும் பெற்றனர். லோக்கன் டக்கர் 19 ஓட்டங்களுடனும் ஜோர்ஜ் டொக்ரெல் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். சஞ்சித் ஷர்மா 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 39 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் மொஹமத் வசீம் (45), சஞ்சித் ஷர்மா (44), பாசில் ஹமீத் (39) ஆகிய மூவரே 35க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

மொஹமத் வசீமும் 18 ஓட்டங்களைப் பெற்ற ஆரியன்ஷ் ஷர்மாவும் 7.2 ஓவர்களில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்கள் சரிந்ததால் ஐக்கிய அரபு இராச்சியம் ஆட்டம் கண்டது (109 – 6 விக்.)

பாசில் ஹமீத், சஞ்சித் ஷர்மா ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சுமாரான நல்ல நிலையில் இட்டனர். கடைசி 4 விக்கெட்கள் 32 ஓட்டங்களுக்கு சரிந்தன.

பந்துவீச்சில் கேர்ட்டிஸ் கெம்ஃபர் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் லிட்ல் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜோர்ஜ் டொக்ரெல் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அண்டி மெக்ப்றைன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Share:

Related Articles