NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

பெரிய வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும் உயிர்த்த ஞாயிறு தினமான 31 ஆம் திகதியும் நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடி நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்துப் பொலிஸ் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி சமூக பொலிஸ் குழுக்கள் அந்தந்த தேவாலயங்களின் பாதிரிமார்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான மாவட்ட அலுவலர்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் பகுதியிலும் உள்ள தேவாலயங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை சரிபார்க்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவிற்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் சென்ற பொலிஸ் குழு கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து தேவாலயங்களின் பொறுப்பாளர்களை சந்தித்து வருவதுடன் தேவையான பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தவிர கல்முனை பிராந்தியத்தில் இராணுவம் பிசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கையையும் என்றும் இல்லாதவாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles