NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சம்பள உயர்வு தொடர்பில் பெருந்தோட்ட கம்பனிகளின் அறிவிப்பு…!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சம்பள நிர்ணய சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இதன்படி, நாளாந்த சம்பளம் 1,350 ரூபாவாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவு 350 ரூபாவாகவும் சேர்த்து மொத்தமாக 1,700 ரூபாவாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பள அதிகரிப்பு தொடர்பில் “அத தெரண” இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கத்திடம்  வினவியது.

இதற்கு பதில் வழங்கிய அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை,  தற்போதைக்கு குறித்த சம்பள உயர்வை வழங்க முடியாது என தெரிவித்தார்.

“ஏற்கனவே இலங்கையின் தேயிலை விலை உயர்வால் உலக சந்தையை மிக வேகமாக இழந்து வருகிறது. இதனால் தேயிலை உற்பத்தியாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இது நாம் உருவாக்கிய பிரச்சனையல்ல. ஆலோசனை பெற்று என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.  செலுத்த முடியாத ஒன்றை விரும்பினால், சட்டரீதியான பிரச்சினை ஏற்படும். முன்மொழிவு முற்றிலும் நேர்மாறானது. வர்த்தமானி வந்திருப்பது தெரியும். எதிர்காலத்தில் என்ன செய்யாலம் என்று பார்ப்போம்” என்றார்.

Share:

Related Articles