NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேஸ்புக் விளம்பரங்கள் – சிம் நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகள் தொடர்பில் அவதானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தம்புத்தேகம பிரதேசத்தில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை பார்த்து பணத்தை பறிகொடுத்த பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மரப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பேஸ்புக்கில் வெளியான விளம்பரமொன்றை பார்த்து, அவர்களை தொடர்புக்கொண்ட குறித்த பெண், விளம்பரதாரர்கள் கோரிய பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி தம்புத்தேகம பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மரப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பேஸ்புக்கில் வெளியான விளம்பரத்தைப் பார்த்த பெண், விளம்பரத்தை வெளியிட்ட விளம்பரதார பெண்ணிடம் வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு மரப்பொருட்களின் விலை குறித்து வினவியுள்ளார்.

அதனை தொடர்ந்து, மர அலமாரி, மரக்கட்டில் மற்றும் பல பொருட்களை பெற்றுக்கொள்வதாயின் மொத்த தொகையையும் தம்புத்தேகம நகரிலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளார். குறித்த அறிவுறுத்தலுக்கு அமைய, ஒரு இலட்சத்து நான்காயிரம் ரூபாவை வாடிக்கையாளரான பெண் வைப்பிலிட்டுள்ளார்.

அதற்கமைய, பணம் அனுப்பிய பெண் மரப்பொருட்களை எப்போது அனுப்புவீர்கள் என வினவிய போது மரப்பொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதாகவும் அதனால் மேலும் 20,000 வைப்பிலிடுமாறு கோரியுள்ளார். அதற்கமைய, வைப்பிட்டும் பொருட்கள் கிடைக்காதமையினால் பணம் வைப்பிட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளின் பின்னர் அது மோசடி என தெரியவந்துள்ளது.

இதுபோலவே ஆடை விற்பனைகளிலும் மோசடிகள் இடம்பெற்றுவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த விலைக்கு ஆடைகளை விற்பனை செய்வது போன்று பேஸ்புக்கில் விளம்பரப்படுத்தி, வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் பணத்தை வைப்பிலிடக்கூறி பின்னர் தொடர்புகளை துண்டிக்கும் பண மோசடிக்காரர்கள் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதுமாத்திரமின்றி பிரபல சிம் நிறுவனங்களில் இருந்து அழைப்பதாகக்கூறி, வாடிக்கையாளர் பணப்பரிசில் வென்றுள்ளதாக ஏமாற்றி, பணத்தொகையை பெற்றுக்கொள்ள முன்பணம் ஒன்றை செலுத்த வேண்டும் எனக்கூறி பல பொதுமக்களை ஏமாற்றிவரும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடிக்கார கும்பல்கள் தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பேஸ்புக்கில் உள்ள விளம்பரங்களை பார்த்தும், உறுதிப்படுத்தப்படாத மற்றும் தெரியாத இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளின் போது, பணப்பரிசில்கள் குறித்து ஏமாற வேண்டாம் எனவும் பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

Related Articles