NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஷ்யாவில் கலவரம் – அமெரிக்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட யுக்ரைன் ஜனாதிபதி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யுக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கு மூண்டுள்ள போரில் தற்போது யுக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்மூலம் சில கிராமங்களை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையே வோக்னர் கூலிப்படை திடீரென ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியமையை உள்நாட்டுக்குள் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வோக்னர் கூலிப்படை ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஒன்-டான் இராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மொஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தது.

இதனால் ரஷ்யாவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் யுக்ரைனுக்கு எதிராக போரிட வேண்டும். மறுபுறம் துரோகியை ஒடுக்க வேண்டும். இதனால் புட்டின் மற்றும் வோக்னர் படை வீரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் ரஷ்யாவின் மிகவும் நெருங்கிய நாடான பெலாரஸ் மத்தியஸ்தராக செயல்பட்டு, புரிகோசினிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது புரிகோசின் பெலாரஸ் செல்ல வேண்டும் என்றும், வோக்னர் படை மீதான குற்ற வழக்குகளை ரஷ்யா திரும்ப பெற வேண்டும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் வோக்னர் படை மொஸ்கோ நோக்கி செல்வதில் இருந்து பின்வாங்கியது.

இந்த பரபரப்பான சூழ்நிலை நடந்து கொண்டிருந்த வேலையில் யுக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து ஸெலன்ஸ்கி கூறுகையில், ”நான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடன் கலந்துரையாடியதில், யுக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் மற்றும் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து விவாதித்தோம். சர்வதேச உத்தரவு நடைமுறைக்கு வரும்வரை, சர்வதேச நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்’ என்றார்.

மேலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது குறித்து ஸெலன்ஸ்கி பைடன் உடன் ஆலோசனை நடத்தியதை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை, இது தனி விடயம் என்று தெரிவித்துள்ளது.

Share:

Related Articles