NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள நீதிமன்றில் அனுமதி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதிமன்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி இங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (09) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றின் உத்தரவிற்கமைய தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பார்த்தீபன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் பகுதி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஏற்கனவே உத்தரவிடப்பட்டமைக்கு அமைவாக சந்தேகத்திற்கிடமான பிரதேசத்தை பார்வையிடுவதற்கு பொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்தியர் உட்பட உரிய அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இதனை அகழ்வதற்காக தொல்பொருள் திணைக்களத்தால் மதிப்பீடு செய்யப்படும் நிதி தேவை மற்றும் ஏனைய விடயங்கள் எதிர்வரும் 17ஆம் திகதி உரிய குழுவால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள், தொல்பொருள் திணைக்களத்தினர், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்தியர் வாசுதேவன், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் நோ.அஜந்தன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

Share:

Related Articles