NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கேப்டன் மில்லர் படம் எப்படி

வெள்ளக்காரன் கண்ணுக்கு கொள்ளக்காரன். ஊர் மக்கள் கண்ணுக்கு துரோகி. உண்மையில் யார் இந்த கேப்டன் மில்லர்? அவன் சாதித்தது என்ன? – இதுதான் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஒன்லைன்.

சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையில் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்). அக்கிராமவாசிகள் கட்டிய கோயிலுக்குள்ளேயே அவர்களை அனுமதிக்காத அரசன். நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என இருபுறமிருந்தும் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். முன்னதாக பிரிட்டிஷ் படையில் இணைந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன் அதில் இணைகிறார். ஆனால், அங்கு தன் கையாலேயே தனது மக்களை கொல்லும் சூழல் ஏற்படுகிறது.

இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அனலீசன் பிரிட்டிஷ் படையிலிருந்து வெளியேறி ஊர் திரும்ப, கொலைகாரன் என கூறி துரத்தியடிக்கப்படுகிறார். பின்னர் கொள்ளைக் கும்பல் ஒன்றுடன் கைகோக்கும் அவர், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் மூலம் உள்ளூர் அரசனுக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவதுடன், ஒடுக்குமுறையிலிருந்து மக்களை மீட்டது எப்படி என்பதே திரைக்கதை

ஆங்கிலேயே ஆதிக்கத்தையும், அரசனின் சாதிய ஒடுக்குமுறையையும் ஒரே புள்ளியில் இணைத்து, அதனைச் சுற்றி ‘மாஸ்’ தருணங்களை கட்டமைத்து அழுத்தமான கதையாடலை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். சுதந்திர போராட்டக் கதையை சாதிய ஒடுக்குமுறைக்குள்ளிருந்து சொல்ல முயன்றது சிறப்பு. “முன்னாடி அவனுக்கு அடிமையா இருந்தோம், இப்போ வெள்ளக்காரனுக்கு அடிமையா இருக்கோம்.

கோயில் கருவறைக்குள்ள போக விடுவானுங்களா?’ என தனுஷ் பேசும் வசனம், “கீழ் சாதி, மேல் சாதி, குடிசை மாளிகைன்னு எங்க இருந்தாலும் பெண்கள் அடிமை தான். நம்ம சொல்றத கேக்கணும்னா அதிகாரம் இருக்கணும்” என்ற அதிதி பாலன் வசனம் வழியே ஒடுக்குமுறையின் அனைத்து கதவுகளையும் பதம் பார்த்தற்கு பாராட்டுகள்!

தனுஷின் இன்ட்ரோவும், அவருக்கான மாஸ் காட்சிகள் எழுதப்பட்ட விதம், ரசிகர்களுக்கான பிரத்யேக விருந்து. குறிப்பாக பரபர சேஸிங்கில், புகுந்து விளையாடும் கேமராவும், இமைக்கும் நொடியில் வரும் இன்டர்கட் ஷாட்ஸுடன் படமாக்கப்பட்ட இடைவேளைக் காட்சி அட்டகாசமான திரையனுபவம்.

6 அத்தியாயங்களாக பிரித்து சொல்லப்படும் இக்கதையில் அருண் மாதேஸ்வரன் ஸ்டைலில் வன்முறைக் காட்சிகளும், தெறிக்கும் தோட்டாக்களும், ரத்தமும் சதையுமான திரைக்கதைக்கு தேவையாக இருந்தாலும், சில இடங்களில் ஓவர் டோஸ் உணர்வைத் தருகிறது.

மூன்று வெவ்வேறு தோற்றங்கள், அதற்கேற்ற உடல்மொழி, தன் மக்களை கொல்லும் இடத்தில் அஞ்சி நடுங்குவது, குற்றவுணர்ச்சியில் கூனிக்குறுகுவது, ஆக்ரோஷமாக திருப்பி அடிக்கும் இடங்களில் ‘அசுர’த்தனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் தனுஷ்.சிவராஜ்குமாரின் சர்ப்ரைஸ் இன்ட்ரோவில் ‘ஜெயிலர்’ பட நடையாக இருந்தாலும் அவரது ஸ்கிரின் ப்ரசன்ஸ் ரசிக்க வைக்கிறது. சந்தீப் கிஷன் கேமியோவில் கவனம் பெறுகிறார். ஆக்‌ஷனில் களமிறங்கும் நிவேதிதா சதீஷ், ஓரிடத்தில் ஆக்ரோஷம் கொ(ல்)ள்ளும் பிரியங்கா மோகன் கதாபாத்திரங்களும் ரொமான்ஸுக்காக பயன்படுத்தபடுத்தாமல் கதைக்களத்துடன் ஒன்றியே பயணிக்க வைப்பதன் வழியே இயக்குநர் அருண் தனித்து தெரிகிறார். இருவரும் நடிப்பில் குறையில்லாமல் கொடுத்ததை செய்துள்ளனர்.

இறுதியில் வரும் சண்டைக்காட்சி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கான நோக்கமும் தேவையும் பெரிய அளவில் கதையில் இருப்பதாக தெரியவில்லை. அதன்பின் வரும் காட்சிகளும் சற்று இழுவை.நாட்டார் தெய்வ வழிபாடு, கம்யூனிசத்தின் தூவல், ஆதிக்குடியினரின் நிலப்பறிப்பு, சாதிய பாகுபாடு, பிரிட்டிஷ் ஆதிக்கம் என பல சப்ஜெக்ட்டுகளை தொட்டிருக்கிறது படம். ஆனால், இதில் காட்டப்படும் பல விஷயங்கள் சுதந்திரத்துக்கு முன் நிகழ்வதாக சொன்னாலும் இன்றும் பொருத்திப் பார்க்க முடிவது படத்தின் பலம். மொத்தத்தில் திரையனுபவத்துக்கு ஏற்ற வன்முறை கலந்த வெகுஜன சினிமா எல்லோருக்குமானதாக இருக்குமா என்பதும் அவரவர் விருப்பம் சார்ந்ததே

Share:

Related Articles