வேற்று கிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா? என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது.
சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஏதேனும் ஒரு கோளில் ஏலியன்கள் இருப்பதாக ஒரு தரப்பினரும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஏலியன்கள் என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதை என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் வந்ததாகவும், சிலர் அதனைப் பார்த்ததாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிலர் கூறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும் ஏலியன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு மெக்சிகோ நகரில் ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மெக்சிகோவில் நடந்த இந்த ஏலியன்ஸ் கண்காட்சி வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் மேலும் அதிகரித்தது.
இதற்கிடையே, ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மனித வளம் பெருக்கும் திட்டம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏலியன்கள் பூமியில் மனிதர்களிடையே ரகசிய வாழ்க்கை நடத்தி வரலாம் என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அந்த ஆய்வறிக்கையில் பூமியில் பாதாள சுரங்கம் போன்ற மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஏலியன்கள் ரகசிய வாழ்க்கை நடத்தி வரலாம் என்றும், நிலவில் அல்லது மனிதர்களிடையே அவர்கள் நடமாட முடியும் என்றும், பூமிக்கு அவ்வப்போது வந்து செல்ல முடியும் என்றும், ஏலியன்கள் மனித உருவெடுத்து நம்மிடையே கூட வசித்து வரலாம் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவிக்கின்றனர்.