(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின் போது கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் ஜோர்தான் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும், காணாமல் போனவர்களை தேடுவதற்கான மேலதிக தேடுதல்கள் இடம்பெற்று வருவதாகவும் ஜோர்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐந்து ஈரானிய யாத்ரிகர்களும் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இறப்புக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இறப்புகள் குறித்த அறிக்கையில், ஜோர்தானிய வெளியுறவு அமைச்சுஇ இறந்தவர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு ஏற்ப அடக்கம் செய்யும் நடைமுறைகளில் சவுதி அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் உலகின் மிகப்பெரிய பொதுக் கூட்டங்களில் ஒன்றாகும். சவுதி அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஆண்டு 1.8 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரிகர்கள் பங்கேற்பார்கள்.
ஹஜ் யாத்திரையில் நெரிசல்கள் உட்பட கொடிய பேரிடர்களின் வரலாறு பதிவாகியுள்ளது. ஆனால் பெரும்பாலான ஆண்டுகளில் முக்கிய சவால் கடுமையான வெப்பம் காரணமாக நிகழ்வதாகும்.
அதன்படி, இந்த வாரம் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் (114.8கு)ஐ தாண்டியுள்ளதாகவும், வெளியிலும் கால் நடையாகவும் செய்யப்படும் பல சடங்குகள் குறிப்பாக முதியவர்களுக்கு சவாலாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெப்பத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல காலநிலை கட்டுப்பாட்டுப் பகுதிகளை அமைத்துள்ளதாக சவுதி அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் தண்ணீரை விநியோகித்து வருவதுடன், வெயிலில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்று யாத்ரிகர்களுக்கு அறிவுறுத்தியும் வருகின்றனர்.
புனித யாத்ரஜகர்கள் தண்ணீர் குடிக்கவும், வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், பகல் நேரத்தில் அதிக வெப்பமான நேரங்களில் வெளியில் இருப்பதைத் தவிர்க்கும்படியும் சவூதி அரேபிய சுகாதார அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டு யாத்திரிகர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.