“மக்களைக் கொல்வதோ வீடுகளை எரிப்பதோ உண்மையான புரட்சி கிடையாது. மாறாக நாட்டில் மக்கள் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதே உண்மையான புரட்சி” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த்துள்ளார்.
‘உறுமய’ வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த நாட்டு மக்களால் அந்தப் பின்னணியை உருவாக்க முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்தும் உறுமய வேலைத்திட்டத்துடன் அரசியல் நோக்கமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தம்புத்தேகம மகாவலி விளையாட்டரங்கில் நேற்று (13) நடைபெற்ற உறுமய நிரந்தர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மகாவலி எச். மற்றும் ஹுருலுவெவ ஆகிய இரண்டு வலயங்களில் உள்ள 9 மகாவலி பிரிவுகளில் 4,012 பேருக்கு இலவச காணி உறுதிகள் வழங்கப்பட்டன. 47 காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடையாளமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.