இங்கிலாந்து ஒருநாள், T20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மெத்யூ மோட், பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து ஒருநாள், T20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக அவுஸ்திரேலிய நாட்டவரான மெத்யூ மோட் நியமிக்கப்பட்டார். இவரது பயிற்றுவிப்பின் கீழ் 2022 T20i உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி வென்றது. அதேபோல, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரையும் வென்று அசத்தியது.
ஆனாலும் இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமான தோல்வியைச் சந்தித்து லீக் சுற்றுடனே வெளியேறியது. அத்துடன், அண்மையில் அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் தோல்விக்குப் பொறுபேற்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மெத்யூ மோட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து ஒருநாள், T20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அவர் தற்போது பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து ஒருநாள்இ T20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மெத்யூ மோட் விலகுவதாக தனது டுவிட்டர் சமூகவலைத்தளப் பக்கத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை பதிவிடப்பட்டுள்ளது.