பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய சகோதரியும் 55 வயதுடைய சகோதரனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று காலைஇந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் வர்த்தகர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வழியினூடாக விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல முயன்ற போது விமான நிலைய அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, இவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து கார் உதிரிப் பாகங்கள், செயற்கைக்கோள் தொலைக்காட்சி உபகரணங்கள், மதுபான போத்தல்கள், 1,100 அறுவை சிகிச்சை கத்திகள், சிகரெட்டுகள், 2,220 இந்திய கோப்பி பொதிகள் மற்றும் 100 கிரீம் பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.