பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழு இன்று வவுனியாவில் கூடவுள்ளதாக அக்கட்சியின் பாராhளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அதன்படி, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட 6 பேர் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் எந்த கலந்துரையாடலும் நடத்தப்பட்டிருக்கவில்லை என்றாலும், கடந்த முதலாம் திகதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, மாவை சேனாதிராஜா மற்றும் எஸ். சிறீதரன் ஆகியோர் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த போதிலும் கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தமக்கு இருப்பதாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்தடுத்தக் கூட்டங்களின் போது சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக ஆராயப்படும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.