NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனில் தவிக்கும் இலங்கையர்கள்!

கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் இந்நாட்டு மக்கள் தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக புதிய பொருளாதார சீர்திருத்த தொடர், அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஒவ்வொரு மாதமும் இந்நாட்டு மக்கள் 196 பில்லியன் ரூபா கடனாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் நாம் 6.5 பில்லியன் ரூபா கடனில் உள்ளோம்.

இவ்வாறான கடன் தொடர்பில் இலங்கை தற்போது கடும் நெருக்கடியில் உள்ளது. அதேவேளை, 2021ஆம் ஆண்டு நாட்டின் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் சுமார் 106 சதவீதம் அதிகரித்துள்ளன.

உணவு வகைகளில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் சுமார் 138 சதவீதம் அதிகரித்துள்ளன. அதன்படி, நாங்கள் மிகவும் விலை உயர்ந்த நிலையில் வாழ்கிறோம். இந்தப் பின்னணியில் பொருளாதார நிலை குறித்து திருப்தி அடைய முடியாது.

ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி இந்த நிலைமைகளை சரியாகப் புரிந்துகொண்டு ஏதாவது ஒரு வகையில் தொடர் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். மிகக் குறுகிய காலத்தில் சில சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது அவசியமாக இருக்கலாம்.

அதன் மூலம் மக்கள் பொருளாதார ரீதியாக உயரத் தேவையான பின்னணியை உருவாக்கும் திறனைப் பெற வேண்டும் என்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles