சுற்றுலா நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 46 ஓட்டங்களைப் பெற்று சொந்த மண்ணில் மோசமான சாதனையை படைத்துள்ளது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று ஆரம்பமான முதல் நாள் ஆட்டம் மழையால் இரத்தான நிலையில், இன்று இடம்பெற்ற 2ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஆரம்பம் முதலே நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் இந்திய அணியினர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் இறுதியில் சகல விக்கெட்களையும் இழந்து 46 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
இந்திய அணியில் 5 வீரர்கள் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ஓட்டங்களையும், ஜெய்ஸ்வால் 13 ஓட்டங்களையும் அணிக்காகப் பெற்றுக் கொடுத்தனர்.
இதனால் 91 ஆண்டுகளின் பின்னர் சொந்த மண்ணில் மிகக்குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையை இந்தியா பதிவு செய்துள்ளது.
1987ஆம் ஆண்டில் புதுடெல்லியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 75 ஓட்டங்களை இந்திய அணி பெற்றது.
2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் 36 ஓட்டங்களையும் 1974 ஆம் ஆண்டுஇங்கிலாந்துக்கு லார்ட்ஸில் எதிராக 42 ஓட்டங்களையும் இந்திய அணி பெற்றிருந்தது.
ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெற்ற மூன்றாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களை பெற்று, 134 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.