இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்குவதை நிறுத்திவிட்டு அதன் அத்தியாவசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேவையின் தரத்தை உயர்த்துவதற்கும், வாடிக்கையாளர் திருப்திக்கான உயர் மதிப்பைப் பேணுவதற்கும், நிறுவனத்திற்கு நியாயமான லாபத்தைப் பெறுவதற்கும், அதில் சமூகப் பொருளாதாரத்திற்கு உயர் நன்மைகளைப் பெறுவதற்கும், ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அவ்வப்போது மதிப்பீடுகளை மேற்கொள்வதன் மூலம் நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மின்சாரச் சட்டத்தில் திருத்தம் செய்யவும், அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள், பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்பை தனியார்மயமாக்காமல் முழுவதுமாக அரசாங்கத்திற்கு சொந்தமான சுயாதீன அமைப்பில் செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒற்றை வாங்குபவர் மாதிரியில் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத் துறைகளின் நிதி மற்றும் செயல்பாட்டு நிர்வாகத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான பொறிமுறையை நிறுவவும் முன்மொழியப்பட்டது.
அதேபோல், அடுத்த ஐந்து வருடங்களில் இலங்கையை பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரச் செலவைக் கொண்ட நாடாக மாற்றுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.