களப்பயிற்சிக்காக சென்ற வேளையில் பஸ் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவரொருவர் 23 நாட்களின் பின்னர் இன்று (23) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 2019ஆம் ஆண்டு கணிதப் பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி களப்பயிற்சிக்காக கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று பதுளை – மஹியங்கனை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்திருந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், படுகாயமடைந்திருந்த சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து, அவர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5ஆக உயர்ந்துள்ளது.