நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவுகளை எதிர்கொண்டு உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
இவரின் காரைதீவு இல்லத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது இது தொடர்பாக இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக அரசாங்க ஊழியர்களை புறம் தள்ளவே கூடாது.
அரசாங்க ஊழியர்களுக்கு அனர்த்த கால நிவாரணம் வழங்குவதில்லை என்று கடந்த காலத்தில் அரசாங்க சுற்று நிருபம் வெளியிடப்பட்டது.
இதனால் தொடர்ந்தேச்சையாக அனர்த்த கால நிவாரணம் அரசாங்க ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் ஆழி பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைப்பதை எமது தொழிற்சங்கம் உறுதி செய்தது.
எனவே தற்போதைய அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கோருகின்றோம். அந்த சுற்று நிருபம் பொருத்தம் அற்றது என்பது எமது நிலைப்பாடாகும்.
மேலும் ஓய்வூதியர்களுக்கும் அரசாங்கம் அனர்த்த கால நிவாரணம் வழங்க வேண்டும். அதே நேரம் அடுத்த மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை முன்கூட்டியே அரசாங்கம் வழங்கி வைப்பது பேருதவியாக அமையும்.
முழுமையாகவோ, பகுதியளவிலோ வீடுகள் பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு வீடுகளை சரி செய்வதற்கு வட்டி இல்லா வங்கி கடன்கள் கிடைக்க அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என்றும் கோருகின்றோம்.
தற்போதைய அனர்த்த நிலைமையின்போது கை விரல் அடையாள பதிவு நடவடிக்கைகள் அரசாங்க அலுவலகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது அரசாங்க ஊழியர்களுக்கு சற்று ஆறுதலை தரும்.