கிழக்கு உகண்டாவில் உள்ள 6 கிராமங்களில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 40 வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள உகண்டா செஞ்சிலுவைச் சங்கத்தினர் கூறுகையில், மண்ணில் புதைந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர்.
மண்ணில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 பேர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உகண்டாவில் அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படுவது வழக்கமானது. எனினும் புதன்கிழமை இரவு பெய்த கடுமையான மழையின் காரணமாக புலம்புலி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அதிநவீன புல்டோசர் வாகனம் கொண்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மண்சரில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.