ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சு ஒன்றை அமைத்தது.
இதன்போது, தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அந்த அமைச்சு செயல்படுத்தி வருகின்றது.
இவை அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் ஆப்கானிஸ்தானில் தாதியர் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் கற்கவும் தாலிபான் அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தாலிபான் அரசின் இந்த தடை உத்தரவிற்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் தெரிவிப்பதாக தனது ஓ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அண்மையில் மூடப்பட்டதை நான் ஆழ்ந்த வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் நினைத்துப் பார்க்கிறேன்.
இந்த முடிவு பெண்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நமது சமூகத்தின் கட்டமைப்பையும் ஆழமாக பாதித்துள்ளது.
நமது அன்புக்குரிய தாயகமான ஆப்கானிஸ்தான் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது.
ஒவ்வொரு துறையிலும், குறிப்பாக மருத்துவத் துறையில் வல்லுநர்கள் நம் நாட்டுக்கு மிகவும் தேவை.
பெண் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் கடுமையான பற்றாக்குறை பெண்களின் உடல்நலம் மற்றும் கண்ணியத்தை நேரடியாக பாதிக்கின்றது.
அதனால், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன், இதனால் ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்கள் கல்வி உரிமையை மீட்டெடுக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் முடியும்.
அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல. அது நமது தார்மீகக் கடமை என்று பதிவிட்டுள்ளார்.