அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பணியாளர்களுக்கு 25,000 ரூபாய் அல்லது 20,000 ரூபாவை ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்குமாறு நிதியமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் அனைத்து அமைச்சுகளினதும் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நிதியச் சட்ட நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2023ஆம் ஆண்டில் வரிக்குப் பிந்திய இலாபத்தில் குறைந்தது 30 சதவீதத்தைக் கூட்டு நிதியத்துக்கு அல்லது வரியாகச் செலுத்திய நிறுவனங்களின் பணியாளர்களுக்கு இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஊக்குவிப்பு கொடுப்பனவுக்காக திறைசேரியினால் நிதி வழங்கப்படமாட்டாது என நிதியமைச்சு குறித்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அமைச்சரவையின் விசேட அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும் எனக் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அடுத்த வருடத்துக்கான பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதன அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.