NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச குடியிருப்புகளின் பெறுமதியை வெளிப்படுத்தினார் ஜனாதிபதி!

வரி செலுத்துவோர் மீதான நிதிச் சுமை குறித்த பொது விவாதத்தின் மூலம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஆடம்பர வீடுகளை வழங்குவதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட கணிசமான செலவுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது பேசிய ஜனாதிபதி திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மாதம் 2 மில்லியன் பெறுமதியான அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு வீட்டில் வசிப்பதாக தெரிவித்தார். அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மாதாந்தம் ரூ. 0.9 மில்லியன் பெறுமதியான வீட்டில் இருப்பதாக கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீடு தொடர்பான முன்னைய கருத்துக்களையும் மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி, அதன் பெறுமதி மாதத்திற்கு ரூ. 4.6 மில்லியன் எனவும் மற்றும் ஒரு ஏக்கருக்கும் அதிகமான இடம் எனவும் கூறினார்.

எவ்வாறாயினும், சில முன்னாள் தலைவர்கள் அத்தகைய சலுகைகளை விட்டுக்கொடுத்த நடவடிக்கைகளை அவர் ஒப்புக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்க வீடொன்றை ஏற்றுக்கொள்ளாததற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் தனது அரச இல்லத்தை கையளித்ததையும் குறிப்பிட்டார். முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாசவும் சில காலங்களுக்கு முன்னர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை கையளித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் வழங்கிய வீடுகள் திரும்பப் பெறப்படுமா என்ற கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி திஸாநாயக்க, அரசியல் பிரமுகர்களுக்கான தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதற்கான தனது நிர்வாகத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

தனக்குக் கிடைத்த பொது ஆணை, அத்தகைய சலுகைகளை மட்டுப்படுத்தவும் வளங்களை தேசத்தின் வளர்ச்சிக்கு திருப்பிவிடவும் அழைப்பு விடுப்பதாக அவர் கூறினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles