வெகு விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்வார் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளையில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்டு 7 வருடங்களாக மக்கள் பாவனைக்குத் திறந்து விடாமல் காணப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் Clean Sri Lanka வேலத்திட்டத்தின் கீழ் நேற்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் மக்களின் வரிப்பணங்களைக் கொண்டு பல கட்டடங்களை கட்டி விட்டு சென்று இருக்கின்றன. அந்த கட்டடங்களில் பெரும்பான்மையான கட்டடங்கள் கைவிடப்பட்ட நிலையிலும், பராமரிப்பற்ற நிலையிலும் காணப்படுகின்றன.
தற்போது நாட்டை பொறுப்பெடுத்துள்ள ஜனாதிபதி, ஊடநயn ளுசi டுயமெய எனும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றார்.
அந்தவகையில் பயன்படுத்தாமல் இருக்கின்ற கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு கழுதாவளையிலேயே அமைந்திருக்கின்ற விசேட பொருளாதார மத்திய நிலையமும் அடையாளம் காணப்பட்டு, Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் பாவனைக்கு திறந்து விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வெகு விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதனால் பெரு நன்மைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறவுள்ளன என கந்தசாமி பிரபு எம்.பி மேலும் தெரிவித்தார்.