இலங்கை மின்சாரசபை ஒருபோதும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வலுசக்தி துறையில் அரசின் இறையான்மை மற்றும் உரிமை பாதுகாக்கப்படுவதோடு, பணியாளர்களின் தொழில் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளன.
நுரைச்சோலை லக்விஜய மின்உற்பத்தி நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னரே நாம் இந்நிறுவனத்தை விற்பதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருப்பதாகவும், தமது அந்த இலக்கு மற்றும் வேலைத்திட்டம் இன்றும் அவ்வாறே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வலுசக்தி மற்றும் நிதித் துறைகளில் அரசின் இறையான்மை, உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என தாம் தேர்தலுக்கு முன்பிருந்தே வலியுறுத்தி வருவதாகவும், அதற்கமையவே தாம் தற்போதும் செயற்பட்டு வருகின்றோம் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கூறியுள்ளார்.
எந்த வகையிலும் தாம் இந்நிறுவனத்தை விற்க மாட்டோம் எனவும், மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் என்பன தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதை மாத்திரமே மறுசீரமைப்பாக மேற்கொண்டிருக்கின்றோம் எனவும், அவை நூறு வீதம் அரச நிறுவனங்களாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவற்றில் எதுவுமே தனியாருக்கு உரித்துடையவை அல்ல எனவும், எனவே இந்த நிறுவனங்களின் எதிர்காலம், தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு என்பவற்றை தாம் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் தினசரி மின்சாரத் தேவையில் 40 சதவீதத்தை வழங்கும் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மின்சார அமைப்பின் தொடர்ச்சியான மற்றும் நிலையான பராமரிப்புக்கு, அது மிக உயர்ந்த நிலையில் பராமரிக்கப்பட்டு சிறந்த முறைகளைப் பயன்படுத்தி இயக்கப்பட வேண்டும் எனவும் மேற்படி செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் திருப்தியடைவதாகவும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.