தனியார் நிறுவனங்கள் ஊடாக வழங்கப்படும் பட்டப்படிப்புகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வெகுவிரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 740 பேர் சட்டமாணி பட்டப்படிப்பையும் பேராதனை பல்கலைக்கழகத்தில் 197 பேர் சட்டமாணி பட்டப்படிப்பையும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் 212 பேர் சட்டமாணி பட்டப்படிப்பையும், திறந்த பல்கலைக்கழகத்தில் 1625 பேர் சட்டமாணி பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், நாட்டிலுள்ள ஒரு சில தனியார் நிறுவனங்கள் எவ்விதமான கொள்கை மற்றும் கண்காணிப்புக்கள் ஏதும் இல்லாமல் செயற்படுவதுடன், பட்டங்களும் வழங்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே இவ்வாறு செயற்படும் நிறுவனங்கள் தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.