தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்பவர் கரு. பழனியப்பன். வெள்ளித்திரையை விட சின்னத்திரை தான் இவருக்கு அதிக புகழை கொடுத்தது. ஜீ தமிழில் ஒளிப்பரப்பான ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் பழனியப்பன். இந்நிகழ்ச்சியின் வாயிலாக திராவிடம், சமூக நீதி குறித்து ஆழமாகவும், அழுத்தமாகவும் பேசி வந்தார். இந்நிலையில் கரு. பழனியப்பன் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் அதீத ஆர்வம் கொண்ட கரு. பழனியப்பன் நடப்பு அரசியல் குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசி வந்தார். இந்நிலையில் தான் ஜீ தமிழில் ‘தமிழா தமிழா’ என்ற பெயரில் விவாத நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்தனர் . விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக கோபிநாத் நடத்தி வரும் பிரபலமான ‘நீயா நானா’ நிகழ்ச்சியை போன்று ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண் விடுதலை, பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, சமூகத்தில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்டவை குறித்து சிறப்பாக விவாதம் நடத்தினார் கரு பழனியப்பன். இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் பல விஷயங்கள் இணையத்திலும் வைரலாகியது. ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி பிரபலமாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், இதிலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார் கரு பழனியப்பன்.
இது தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி. அன்பு முத்தங்கள். இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது.
தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட ” தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது. சமூக நீதி, சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் நன்றி. எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில், விரைவில் சந்திப்போம். இவ்வாறு கரு. பழனியப்பன் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏட்படுத்தியுள்ளது.