NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மேற்கிந்தியதீவுகளை வெளுத்து வாங்கிய தென்னாப்பிரிக்கா..!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது தென்னாபிரிக்க அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடி வருகின்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழைமை (26) தென்னாபிரிக்க அணியினை இரண்டாவது போட்டியில் செஞ்சூரியன் அரங்கில் வைத்து எதிர் கொண்டது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஜோன்சன் சார்ள்ஸின் அதிரடி அபார சதத்தோடு 5 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்கள் குவித்தனர். இப்போட்டியில் 39 பந்துகளில் சதம் விளாசி இருந்த ஜோன்சன் சார்ள்ஸ் T20 சர்வதேச போட்டிகளில் இரண்டாவது அதிவேக சதத்துடன் மொத்தமாக 46 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 118 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் இது மேற்கிந்திய தீவுகள் அணிக்காக வீரர் ஒருவர் T20i போட்டிகளில் பெற்ற அதிவிரைவான சதமாகவும் பதிவானது.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்த போதும் அவர் 4 ஓவர்களில் 52 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 259 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கினை தென்னாபிரிக்கா 4 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 18.5 ஓவர்களில் விரட்டி, மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியதோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-1 என சமநிலை செய்தது.

இப்போட்டியில் சவால் நிறைந்த இந்த வெற்றி இலக்கினை விரட்டியதன் மூலம் தென்னாபிரிக்க அணியானது T20i மற்றும் ஒட்டுமொத்த T20 போட்டிகளில் அதிகூடிய வெற்றி இலக்கினை விரட்டிய அணி என்ற உலக சாதனையை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணியின் வெற்றியை உறுதி செய்த குயின்டன் டி கொக் வெறும் 43 பந்துகளில் சதம் விளாசியதோடு மொத்தமாக 44 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் உடன் 100 ஓட்டங்கள் எடுத்தார். இப்போட்டியின் மூலம் டி கொக் தென்னாபிரிக்க அணிக்காக அதிவேகமாக T20i அரைச்சதம் பெற்ற இரண்டாவது வீரராக மாறினார்.

மறுமுனையில் ரீசா ஹென்ரிக்ஸ் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 11 பௌண்டரிகள் உடன் 68 ஓட்டங்கள் பெற்றார். இரு வீரர்களும் தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப விக்கெட்டுக்காக வெறும் 10.5 ஓவர்களில் 152 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர், ஓடியன் ஸ்மித், ரெய்மோன் ரெய்பேர் மற்றும் ரொவ்மன் பவேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.

தென்னாபிரிக்க அணி இலக்கை விரட்டிய பின்னர் இப்போட்டியில் மொத்தமாக 517 ஓட்டங்கள் பெறப்பட்டதோடு அதுவே இதுவரை T20 போட்டிகள் வரலாற்றில், T20 போட்டி ஒன்றில் இரு அணிகளும் இணைந்து பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக காணப்படுகின்றது. அதேநேரம், இதுவே T20i போட்டிகள் வரலாற்றில் இரு அணிகளும் இணைந்து 500 ஓட்டங்களை கடந்த முதல் சந்தர்ப்பமாகவும் மாறியது. போட்டியின் பவர் பிளே, அதாவது முதல் ஆறு ஓவர்களில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களையும் (102/0) தென்னாபிரிக்க அணி இப்போட்டியில் எடுத்திருந்தது.

அதேவேளை, இப்போட்டியில் வெறும் 13.5 ஓவர்களில் 200 ஓட்டங்களை எட்டிய தென்னாபிரிக்க அணி 200 ஓட்டங்களை T20i சர்வதேச போட்டிகளில் பெறுவதற்கு குறைவான பந்துகளை (83) எடுத்துக் கொண்ட அணியாகவும் வரலாற்று சாதனை ஒன்றை பதிவு செய்தது. இப்போட்டியில் தென்னாபிரிக்காவின் வெற்றியினை உறுதி செய்ய காரணமான குயின்டன் டி கொக் ஆட்டநாயகனாக தெரிவானார்.

தென்னாபிரிக்க – மேற்கிந்திய தீவுகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20i போட்டி செவ்வாய்க்கிழமை (28) நடைபெறவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles