ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட ‘ஸ்டார்ஷிப்’ விண்கலத்தை முதல்முறையாக விண்ணில் செலுத்தும் சோதனை தோல்வி அடைந்தது.
அமெரிக்க தொழில் அதிபரும் டிவிட்டர் நிறுவன நிறைவேற்று பணிப்பாளருமான எலோன் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டார்ஷிப் விண்கலம் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகவும் பிரமாண்டமான, அதிக எடையை சுமந்து செல்லக்கூடிய விண்கலமாகும்.
அதிக உந்து திறன் கொண்ட முதல் நிலை, மனிதர்களையோ, பிற பொருட்களையோ ஏற்றிக்கொண்டு விண்வெளியில் உலா வரும் இரண்டாவது நிலை என்று இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக இந்த விண்கலம் உருவாக்கப்பட்டது.
மீண்டும் பயன்படுத்தும் நோக்கில் ஏவப்பட்டால் 150 டன் வரையும், ஒருமுறை பயன்படுத்தினால் போதும் என்றால் 250 டன் வரையும் எடையை சுமந்து செல்லக்கூடிய இந்த விணகலம்;, முதல்முறையாக திங்கட்கிழமை விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது.
சோதனை முறையில் செலுத்தப்படுவதால் அதில் மனிதர்களோ, செயற்கை கோள்களோ ஏற்றப்படவில்லை. இந்தச் சூழலில், முதல் நிலை உந்து பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அந்த சோதனை திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், விண்ணை நோக்கி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விண்கலம் வெடித்துச் சிதறி ஹவாய் தீவு அருகே உள்ள பசிபிக் கடல் பகுதியில் விழுந்தது.
இதுகுறித்து எலோன் மஸ்க் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஸ்டார் ஷிப்பை ஏவி சோதித்ததில் ஏராளமான விவரங்களைத் தெரிந்து கொண்டதாகவும், இன்னும் சில மாதங்களில் மீண்டும் அந்த விண்கலத்தை ஏவி சோதிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.