தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து ஹிட்டானது. தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ், சென்னையில் நடைபெற்ற தக்ஷின் மாநாட்டில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவருக்கு யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இவ்விருதை தனுஷிற்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பேசியதாவது, நாற்பது வயதில் யூத் ஐகான் விருது வாங்குவேன் என்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் நிறைய சாதிக்க இருக்கிறது. சினிமாவுக்கு வந்த புதிதில் நான் இதுபோன்ற தோற்றத்தில் வந்தபோது ஏற்க மறுத்தனர். ஆனால் தற்போது கொண்டாடுகிறார்கள். எனது பெற்றோருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என நெகிழ்ச்சியாக பேசினார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.