அரச தொலைக்காட்சி ஒன்றின் முன்னாள் பெண் ஊடகவியலாளர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தமை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பொதுமுகாமையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரியை நியமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசதொலைக்காட்சியொன்றின் பெண் ஊடகவியலாளர் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்;துள்ளது.
அரச தொலைக்காட்சியொன்றில் முன்னர் பணிபுரிந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் தான் மேலதிகாரியிடமிருந்து பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக தான் இவ்வாறான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் அதில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை பகிரங்கமாக தெரிவித்திருப்பதை வரவேற்றுள்ள ஊடக அமைப்பு மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை அச்சமின்றி வெளிப்படுத்துவதற்கு அவர் முன்வந்துள்ளமையை பாராட்டியுள்ளது.
அரச தொலைக்காட்சியில் பணியாற்றிய போது, தான் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகளுக்கு காரணமானவர்கள் குறித்து அதன் தலைவருக்கு தெரியப்படுத்தியும், ஆதாரங்களை சமர்ப்பித்ததாகவும் குறிப்பிட்டிருந்த அவர், எனினும், அதற்கு பொறுப்பான முறையில் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பெண் ஊடகவியலாளர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பதை ஊடக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, அவர் தனது நன்மதிப்பை கௌரவத்தை காப்பாற்ற அங்கிருந்து விலக தீர்மானித்தார் எனவும் தெரிவித்துள்ள ஊடக அமைப்பு, குறிப்பிட்ட நிறுவனத்தில் பெண்கள் தொந்தரவுகளை தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் சூழல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
பெண்கள் தொடர்ச்சியாக வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுகின்ற போதிலும் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அரசியல் பாதுகாப்பை பெறுகின்றார்கள் ஆகவே நாட்டின் அரசியல் தலைமை இது குறித்து உத்தியோகபூர்வ விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஊடக அமைப்பு பகிரங்கமாக தெரிவித்துள்ளது.