AI தொழில்நுட்பம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதோ, அதேபோல சில ஆபத்துகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. அதிலும் சரியாக பயன்படுத்தாத சமயங்களில் அதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து கூகுள் நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஓப்பன் ஏஐ நிறுவன முதன்மை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் போன்றவர்கள் அவ்வபோது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில், ஆல்ட்மன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோது, “என்னுடைய சொந்த தயாரிப்பு குறித்து எனக்கே கொஞ்சம் அச்சமாகத்தான் உள்ளது’’ என்றார். தவறான தகவல்களை பரப்பவும், சைபர் தாக்குதல்களை நடத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமோ என்று அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டார்.
சுந்தர் பிச்சை இதுகுறித்து கூறுகையில், ஏஐ தொழில்நுட்பத்தை தாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார். மனித மூளையே எப்படி வேலை செய்கிறது என்பதை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றார் அவர். சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்பங்கள் அபாயகரமானவை என்று டிவிட்டர் சிஇஓ எலான் மஸ்க் கூறியுள்ளார்.
பில்கிட்ஸ் இதுகுறித்து குறிப்பிட்டுள்ள கருத்துக்களில், “கட்டுப்பாட்டை மீறிய வகையில் ஏஐ தொழில்நுட்பம் செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்று ஒரு இயந்திரம் கருதுமானால், அவை நம்மை விட வேறுமாதிரியாக சிந்திக்கும் அல்லது நம்மைப் பற்றி கவலைப்படாது. ஆனால், கடந்த சில மாதங்களில் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக பல வளர்ச்சிகளை கண்டுள்ள நிலையில், இதுகுறித்து உடனடியாக விவாதிப்பது அவசியம்’’ என்று தெரிவித்தார்.