தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷாவின் பிறந்தநாள் இன்று. இந்திய சினிமாவை பொறுத்தவரை, தொடக்க காலம் முதலே நடிகர்கள் எத்தனை வயது வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால் நடிகைகள் அதிகபட்சம் 5 ஆண்டுகள் ஹிரோயினாக நடிப்பது அரிதான ஒன்று. அதன் பிறகு அக்கா, அண்ணி, கவுரவ வேடங்கள்தான். தமிழில் இந்த வழக்கத்தை உடைத்தவர்கள் ஒரு சிலரே. அதில் த்ரிஷாவும் ஒருவர்.சென்னையில் பிறந்து வளர்ந்த த்ரிஷா தனது 12ஆம் வகுப்பின் போதே மாடலிங் துறையில் நுழைந்தவர். 1999ஆம் ஆண்டு ‘மிஸ் சேலம்’ மற்றும் ‘மிஸ் சென்னை’ ஆகிய பட்டங்களை வென்றவருக்கு அதே ஆண்டு, ‘ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஓரிரு காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பிரியதர்ஷனின் ’லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் முதலில் வெளியானது அமீரின் ‘மௌனம் பேசியதே’ படம். முதல் படத்திலேயே தனது ஆர்ப்பாட்டமில்லாத அழகினால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார் த்ரிஷா.
தொடர்ந்து ‘சாமி’, ‘கில்லி’ போன்ற படங்களின் அமோக வெற்றி, த்ரிஷாவை தமிழின் அப்போதைய பரபரப்பான நடிகைகளில் ஒருவராக்கியது. இன்னொரு பக்கம் தெலுங்கிலும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் த்ரிஷா இடம்பெற்றார்.
2010ஆம் ஆண்டு கௌதம் மேனம் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ த்ரிஷாவுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அழகை தாண்டி சிறப்பான நடிப்பையும் அப்படத்தில் வழங்கி ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்தார். த்ரிஷாவின் திரைவாழ்வில் ‘ஜெஸ்ஸி’ என்றென்றும் அவரது பேர் சொல்லும் பாத்திரமாக அமைந்தது.
கதாநாயகியை மையப்படுத்தும் படங்கள் பெரிதாக வெளியாகாத காலகட்டத்தில், தான் நடிக்கும் படங்களிலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். உதாரணம் ‘உனக்கும் எனக்கும்’, ‘அபியும் நானும்’, ‘சர்வம்’ ஆகிய படங்கள்.
த்ரிஷாவுக்கு ஒரு மாபெரும் கம்பேக் ஆக அமைந்த படம் ‘96’. அதில் இடம்பெற்ற ஜானு கதாபாத்திரம் மிகப் பெரிய பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது. அந்த மஞ்சள் நிற சுடிதாரில் ரசிகர்களின் பார்வையை அகல விடாதபடி படம் முழுக்க வசீகரித்தார் த்ரிஷா.
அவருக்கு வயதாகி விட்டது’, ‘இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்’ போன்றவை சமூக வலைதளங்களில் த்ரிஷா மீது வீசப்படும் கேலிகள். 20 ஆண்டுகளைத் தாண்டியும் உடலை பேணுவதில் மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக த்ரிஷாவை சொல்ல முடியும். அதே போல தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள், அவதூறுகளை எதிர்கொண்டாலும் அவற்றை இடக்கையால் புறந்தள்ளி இத்தனை ஆண்டுகள் திரைத்துறையில் நாயகி அந்தஸ்துடன் நீடிப்பதே பெரும் சாதனைதான்.
‘மௌனம் பேசியதே’வில் சந்தியாவாக வசீகரித்த த்ரிஷா 20 ஆண்டுகளை கடந்தும் ‘பொன்னியின் செல்வனின்’ குந்தவையாக ரசிகர்களின் மனதை ஆண்டு கொண்டிருக்கிறார்.