இந்த வருடம் கொழும்பில் விசேட வெசாக் பண்டிகை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சுமார் மூன்று வருடங்களின் பின்னர் இந்த விசேட நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
கொழும்புக்குள் ஆறு வெசாக் வலயங்கள் நிறுவப்படும் என தெரிவித்த அவர், வெசாக் தானசாலை நடத்த விரும்பும் எந்தவொரு நபரும் கொழும்பு பொது சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் தானசாலைகளை நடத்த பலர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். தற்போது 125 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரிசி மற்றும் மஞ்சட்சோறு வழங்கும் 49 தன்சல்கள் உள்ளன. 23 ஐஸ்கிரீம் பரிமாறப்படும் தானசாலைகளும், 10 மரவள்ளிக்கிழங்கு தானசாலைகளும் ஏனைய பிஸ்கட், ரொட்டி, கடலை போன்ற பிற பொருட்களை வழங்கும் தானசாலைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலுக்கு அண்மித்த பகுதியிலும் விசேட தானம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து தானசாலைகளையும் ஆய்வு செய்ய 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.