(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கடந்த 6ஆம் திகதி வெசாக் தினத்திற்குப் பிறகு புகையிரத தண்டவாளத்துக்கு அருகில் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் வழக்கு தொடர்பில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சம்பவ தினத்தன்று, உயிரிழந்த மாணவி, தனது தோழியுடன் வெசாக் பார்க்கப் போவதாக தன் தாயிடம் கூறிவிட்டு சென்றாலும், அவர்கள் தங்கள் பயணத்திற்கு வேறு திட்டங்களை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. அதாவது, தோழிகள் இருவரும் வேறு ஒரு பயணத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
உயிரிழந்த மாணவியிடம் தேசிய அடையாள அட்டை இல்லை என்பதால் மற்றொரு தோழியிடம் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு இருவரும் சேர்ந்து தாம் திட்டமிட்டிருந்த பயணத்திற்கு சென்றுள்ளனர்.
இருவரும் களுத்துறைக்கு வந்தபோது உடன் வந்த தோழியின் காதலன் காரில் பிறிதொரு நண்பருடன் வந்துள்ளார். உயிரிழந்த மாணவி அவரை சந்திக்கும் இரண்டாவது நாள் அதுவாகவிருந்தது. பின்னர் நான்கு பேரும் களுத்துறை நகரின் நடு வீதிக்கு அருகில் அமைந்துள்ள விடுதிக்குச் சென்றுள்ளனர்.
5 மாடிகளைக் கொண்ட அந்த விடுதியில் 7 அறைகள் உள்ளன. தங்குமிட வசதியைத் தவிர, சமைத்த உணவு பரிமாறும் இடமாகவும் இருந்தது. நான்கு பேரும் மாலை 6.30 மணியளவில் விடுதிக்கு வந்து தங்களுக்கு ஒரு அறை வேண்டும் என்று கூறியபோது, விடுதியின் மேலாளர் 4 பேர் இருப்பதால் அவர்களுக்கு 2 அறைகள் வேண்டும் என்று கூறினார். அதன்படி, விடுதியின் மூன்றாவது மாடியில் 6 மற்றும் 7ஆம் இலக்க அறைகள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டன.
குளிரூட்டப்பட்ட அறை களு கங்கை குளத்தை நோக்கி அமைந்திருந்ததுடன், புகையிரத பாதைக்கு அருகிலும் இருந்தது. அவர்கள் விடுதியில் இருந்து பன்றி இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் சோறு என்பவற்றை பெற்றுள்ளனர். எனினும் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட மதுபான போத்தல்களை குடிப்பதை விடுதியின் ஊழியர்கள் வெளியில் இருந்து பார்த்துள்ளனர்.
இதற்கிடையில், இரவு 7.20 மணியளவில் திரும்பி வருவேன் என்று கூறிவிட்டு தோழியும் அவரது காதலனும் விடுதியை விட்டு வெளியேறினார். பின்னர் இரவு 7.40 மணியளவில் அவரின் ஏனைய நண்பரும் காதலியுடன் வெளியேறியிருந்த தனது நண்பருக்கு அழைப்பை ஏற்படுத்தி, வெளியில் சென்று வருகிறேன் எனக்கூறிவிட்டு விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
பின்னர், மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி, ‘அவள் வெறித்தனமாக நடனமாடி தனது ஆடைகளை களைந்துவிட்டு ஜன்னல் வழியாக குதித்தார். இறந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், நீங்கள் இருவரும் வாருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
காதலுடன் விரைந்து வந்த தோழி, புகையிரத தண்டவாளம் அருகே சென்றாள். காதலன் முன்னோக்கி ஓடி, திகைத்துப் போனான். கீழே விழுந்திருந்த மாணவியின் உடல் நிர்வாணமாக புகையிரத பாதையில் இருந்தது. அவள் கண்கள் திறந்திருந்தன. அவன் தன் சட்டையை கழற்றி அவள் உடம்பில் போட்டு அவளை தன் கைகளில் தூக்கி தண்டவாளத்திற்கு அருகில் விட்டான். திரும்பி ஓடி வந்து தனது காதலியிடன் நடந்தவற்றை கூறியுள்ளார்.
”அவளது உடல் கீழே உள்ளது. உணர்வு இல்லை. உடம்பில் ஒரு துணிக்கூட இல்லை” என்றார். பயந்துபோன இருவரும் களுத்துறை வடக்கு விலேகொடவில் உள்ள அவரது வீட்டில் சென்று தங்கியுள்ளனர்.
இதற்கிடையில், ஹோட்டலின் இரண்டாவது மாடியில் சாப்பிட வந்த நபர் ஒருவர், ‘புகையிரத தண்டவாள ஓரத்தில் ஒரு பெண் படுத்திருப்பதாக’ விடுதி மேலாளரிடம் கூறியுள்ளார். அதன்படி 1990 க்கு அழைப்பு ஏற்படுத்தி அம்புலன்ஸ் சேவைக்கு அழைத்திருந்தனர். அம்புலன்சில் வந்த அதிகாரிகள், அவரை பரிசோதித்துவிட்டு இறந்துவிட்டதாக கூறிவிட்டு சென்றனர். அதன்படி தெற்கு களுத்துறை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விபரத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவரை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் 29 வயதுடையவர் என்பதுடன் இரு திருமணங்களை செய்துகொண்டவர் எனவும் தெரிவித்த பொலிஸார், பிரதான சந்தேகநபரும், அவர் தலைமறைவாகும் போது அவரது காரை பயன்படுத்திய பிறிதொரு நண்பரும், உயிரிழந்த மாணவியின் தோழியும் அவரது காதலனும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.