(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இரண்டு வருடங்களின் பின்னர் தமது தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் 50,000 முதல் 75,000 வரை மாதச் சம்பளம் பெற்றுக்கொள்வதாக, பொகவந்தலாவை பெருந்தோட்டக் கம்பனியின் நோர்வூட் வலயத்திற்குப் பொறுப்பான பிரதம நிறைவேற்று அதிகாரி பெரோஸ் மஜித் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக தேயிலை பயிர்ச்செய்கைக்குத் தேவையான இரசாயன உரங்கள் இல்லாததால், தேயிலை தோட்டங்கள் காடுகளாக மாறிய நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வேலை நாட்களும் குறைக்கப்பட்டது.
இதனால் தேயிலைத் தோட்டத்தின் உற்பத்தியும் குறைந்ததுடன், தோட்டத்தொழிலாளர்கள் பெற்றுக்கொண்ட மாதாந்த சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரி பெரோஸ் மஜித் கூறுகையில், தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் பல பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கிடைக்கும் கூலி போதிய அளவு இல்லாதமையால், தேயிலை தொழில் நலிவடையும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது தேயிலை பயிர்ச்செய்கைக்குத் தேவையான இரசாயன உரங்கள் கிடைப்பதால், காடுகளாக மாறியிருக்கும் தேயிலை தோட்டம் மீட்கப்பட்டுள்ளதாகவும், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.