(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்து, பௌத்தம், இஸ்லாம் ஆகிய சமயங்களை இழிவுபடுத்தி பேசிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை குற்றப்புலனாய்வு துறையை விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
எனினும், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விசாரணைக்கு பயந்து கடந்த 14ஆம் திகதி நாட்டை விட்டு சென்றுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு தற்போது வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றபோதும், தடை விதிக்க முன்னதாகவே அவர் வெளிநாடு சென்றுள்ளார்.
இவ்வாறான நிலையில் ‘ஏற்கனவே திட்டமிட்ட அமைச்சின் உத்தியோக பூர்வ வேலைகளுக்காக தான் வெளிநாடு வந்துள்ளதாகவும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவேன் எனவும், தனது ஆராதனை கூடத்தில் சந்திப்போம்’ எனவும் ஜெரோம் பெர்னாண்டோ சமூக வலைத்தளத்தில் நேற்று பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.
இதேவேளை, மே 19 ஆம் திகதி மற்றும் 21 ஆம் திகதிகளில் முறையே மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் அவரை பின்பற்றுபவர்களுடன் ஆராதனை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதற்கான விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.