ஜிமெயில் பயனர்களுக்கு பாதுகாப்பு அம்சமாக விளங்கும் வகையில், கூகுள் நிறுவனம் சமீபத்தில் புளூ வெரிஃபைடு (Blue verified) செக்மார்க் வழங்கியது.
இந்த அம்சத்தின் மூலம் ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோர், உண்மையான மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் இமெயில்களிடையே வித்தியாசத்தை உணர முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆயினும் தற்போது ஜிமெயிலின் புதிய அம்சத்தை ஏமாற்றும் வழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
க்ரிஸ் ப்ளூமர் என்ற பாதுகாப்பு ஆய்வாளர் ஜிமெயில் சேவையில் ஏற்பட்டு இருக்கும் பாதுகாப்பு குறைபாடை கண்டறிந்து, இந்த குறைபாடு கூகுளின் அதிகாரப்பூர்வ வெரிஃபிகேஷனில் மாதிரியை உருவாக்கி, பயனர்களை குறிப்பிட்ட இமெயில் நம்பகத்தன்மை கொண்டது என்று நம்ப வைப்பதாக கூகுள் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஆயினும் இது வேண்டுமென்றே கூறப்படும் குற்றச்சாட்டு என்ற பதில் அளித்த கூகுள்இ இது பற்றி விசாரிக்க போவதில்லை என கூகுள் நிறுவனத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இதுபற்றிய தகவல்களை க்ரிஸ் ப்ளூமர் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளதுடன் குறித்த பதிவு வேகமாக பரவியதை அடுத்து, கூகுள் நிறுவனம் இந்த குறைபாடு பற்றி விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து கூகுள் செக்யுரிட்டி குழு தெரிவிக்கையில், ‘குழப்பத்திற்காக நாங்கள் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்களது முந்தைய பதில் உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று புரிந்து கொள்கிறோம். என்ற போதிலும், இந்த விவகாரத்தில் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இது பற்றிய ஆய்வு மற்றும் எதிர்கால அப்டேட் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிவிப்போம்,’ என குறிப்பிட்டுள்ளது.