NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் – அரை இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தென் கொரியாவின் ஜியொஞ்சி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 11 நாடுகளுக்கு இடையிலான 12ஆவது ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதிபெற்றுள்ளது.

சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக நேற்று (14) நடைபெற்ற பி குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் 83 – 17 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை வெற்றிகொண்டு அரை இறுதி வாய்ப்பை பெற்றுக்கொண்டது.

வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஒரு அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனும் பலம்வாய்ந்ததுமான மலேஷியாவை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் மிக மோசமாக விளையாடி தனது முதலாவது தோல்வியைத் தழுவிய இலங்கை, நேற்று (14) நடைபெற்ற சைனீஸ் தாய்ப்பேயுடனான போட்டியில் திறமையாக விளையாடி வெற்றிபெற்றது.

அப்போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய இலங்கை ஆட்டத்தின் முதல் இரண்டு பகுதிகளையும் 23 – 2, 25 – 4 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கி இடைவேளையின் போது 48 – 6 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதன் காரணமாக 100 கோல்களுக்கு மேல் இலங்கை போடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இடைவேளையின் பின்னர் நிதானத்துடன் விளையாடிய இலங்கை அணி கடைசி 2 ஆட்ட பகுதிகளை 18 – 2, 17 – 9 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கி ஒட்டு மொத்தமாக 83 – 17 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது.

இலங்கை சார்பாக தில்மி விஜேநாயக்க 45 முயற்சிகளில் 38 கோல்களையும் பாஷினி உடகெதர 24 முயற்சிகளில் 23 கோல்களையும் சஜினி ரட்நாயக்க 18 முயற்சிகளில் 12 கோல்களையும் மினங்கா கன்கானம்கே 11 முயற்சிகளில் 10 கோல்களையும் போட்டனர்.

Share:

Related Articles