(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக மீண்டும் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க விலைக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் நாட்டு அரிசி 95 ரூபாவுக்கும் கீரி சம்பா அரிசி தலா 110 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நெல் கொள்வனவுக்காக அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் பணத்திற்கு ஏற்ப கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கடந்த பருவத்தில் அரசாங்கம் நெல் கொள்வனவு செய்ய 13000 கோடி ரூபாவை ஒதுக்கியதையடுத்து நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்டு மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் நெல்லை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்தின் பிரகாரம் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லில் இருந்து பதப்படுத்தப்பட்ட அரிசி 29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.