(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மரக்கறி விதைகளை இறக்குமதி செய்வதை 100 சதவீதத்தால் நிறுத்துவதற்கான வேலைத்திட்டத்தை விவசாய திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் விதைகளுக்கு விவசாயிகள் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதால், நாட்டிலுள்ள பயிர்ச்செய்கை நிலங்களுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாயத் திணைக்களத்தின் விதைப் பண்ணையின் உற்பத்தி விரிவாக்கம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், காய்கறி விதை தேவையில் 100 சதவீதம், பயத்தங்காய் 93 சதவீதம், பாகற்காய் 89 சதவீதம், கத்தரிக்காய் 79 சதவீதம், மொச்சை 64 சதவீதம், வெண்டைக்காய் 61 சதவீதம், மிளகாய் 44 சதவீதம், தக்காளி 27 சதவீதம் மற்றும் முள்ளங்கி 39 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கம் தெரிவித்துள்ளது.
இந்நாட்டின் மொத்த மரக்கறி விதைகளின் தேவை சுமார் 8,00,000 கிலோவும், மலையக மரக்கறிகளுக்கு 1,00,000 கிலோவும், தாழ்நில மரக்கறிகளுக்கு 7,00,000 கிலோவும் தேவைப்படுவதாகவும், அவை உள்ளுர் விதை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட விதைகள் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிடுகிறது.
நாட்டின் வழமையான காலநிலையில் முட்டைக்கோஸ், சீன முட்டைக்கோஸ், குடை மிளகாய், பீட்ரூட், நோக்கோல், லீக்ஸ், சாலட் போன்ற மலையக மரக்கறிகளின் விதைகளை இந்த நாட்டில் உற்பத்தி செய்ய முடியாது எனவும், அந்த விதைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும், வருடாந்தம் சுமார் 1,00,000 கிலோ விதைகள் தேவைப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, விவசாய திணைக்களத்தினால் உற்பத்தி செய்யப்படும் விதைகளை விவசாயிகள் இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் விவசாய சேவை நிலையங்களுடன் இணைந்து விதை விற்பனை நிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.