முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு பல தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதன்படி, இன்று முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரையில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரண்டு கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் விசாரணைகள் சரியான முறையில் நடக்க வேண்டும் என்றும், அகழ்வுப் பணிகளில் சர்வதேசக் கண்காணிப்பு அவசியம் என்றும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்படப் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்று தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாது என முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.