பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்றில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னர், இந்த பயங்கர குண்டுவெடிப்புத் தாக்குதலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கைபர் பக்துன்வா குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.