(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வாடகைக் கட்டடங்களில் 121 பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருவதாகவும் அவற்றுக்கான வாடகையாக வருடாந்தம் 11 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 121 பொலிஸ் நிலையங்கள் வாடகைக் கட்டடங்களிலேயே செயற்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் முகாமைத்துவ பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, மேல் மாகாணத்தில் தனியார் கட்டடங்களில் இயங்கிவரும் பொலிஸ் நிலையங்களுக்காக மாதாந்தம் 50 இலட்சம் ரூபாவும் வடமாகாணத்தில் இவ்வாறு இயங்கும் பொலிஸ் நிலையங்களுக்காக 2,94,000 ரூபாவும், கிழக்கு மாகாணத்தில் 2,33,000 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
மேலும், வடமேல் மாகாணத்தில் 5 இலட்சம் ரூபாவும், சப்ரகமுவ மாகாணத்திற்காக 8 இலட்சம் ரூபாவும், மத்திய மாகாணத்திற்காக 9 இலட்சம் ரூபாவும், ஊவா மாகாணத்திற்காக 5 இலட்சம் ரூபாவும் மற்றும் தென் மாகாணத்தில் இயங்கும் பொலிஸ் நிலையங்களுக்காக 5 இலட்சம் ரூபாவும் மாதாந்தம் வாடகை வழங்கப்படுவதாகவும் மேற்படி தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், இலங்கை பொலிஸாருக்கு தேவையான 75 ஆயிரம் தொப்பிகளைக் கொள்வனவு செய்ததால், பொலிஸ் திணைக்களத்துக்கு 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.