(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் மல்லியப்பு சந்தியில் ஆபத்தான வகையில் இரண்டு முச்சக்கர வண்டியை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டு அதனை ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் இரண்டு இளைஞர்களை பொலிஸார் இன்று (03) கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த இந்த காணொளியை முச்சக்கர வண்டிகளை ஓட்டிய இளைஞர்களே பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதனையடுத்து முச்சக்கர வண்டி தரிப்பிடங்களில் பதிவு செய்யப்பட்ட இலக்கங்களை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை நடத்திய ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர், அந்த முச்சக்கர வண்டிகளுடன் இளைஞர்களை கைது செய்துள்ளதாக போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் விராஜ் குலசூரிய தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த 20 மற்றும் 30 வயதானவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் நிபுண தெஹிகம, ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக ஆபத்து ஏற்படும் வகையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டியமை தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்ய உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.