(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
உகண்டா நாட்டின் விக்டோரியா ஏரியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த விபத்து நேற்று முன்தினம் (02) இடம்பெற்றிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணித்தமை மற்றும் அளவுக்கு அதிகமான பொதிகள் ஏற்றப்பட்டிருந்தமையே விபத்துக்கு காரணம் என உகண்டாவின் பொலிஸ் தலைமையகம் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
காணாமல் போனோரை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் உள்ளுர் மக்களும் ஈடுப்பட்டுள்ளனர்.
இதுவரை 9 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உகண்டாவில் படகு விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
உகண்டா மற்றும் கொங்கோ எல்லையிலுள்ள அல்பர்ட் ஏரியிலும், 2018 இல் விக்டோரியா ஏரியிலும் உல்லாசப் படகுகள் மூழ்கியதில் 32 பேர்வரை பலியானதுடன், அதே ஆண்டு செப்டம்பரில் விக்டோரியா ஏரியின் தான்சானியா பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற படகு விபத்தில் 26 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.