(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இங்கிலாந்தின் மன்னரான மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் சிறப்பு நாணயம் இங்கிலாந்தில் வெளியிடப்படவுள்ளது.
இங்கிலாந்து நாணயங்களை அதிகாரபூர்வமாக தயாரிக்கும் ‘தி ரோயல் மின்ட்’ நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் ஆறாம் திகதி மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழா இங்கிலாந்தில் உள்ள வெஸ்மினிஸ்ட்டர் அபேயில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
அதற்கமைய வெஸ்ட்மின்ஸ்டர் அபேயை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஐந்து மில்லியன் நாணயங்களை ‘தி ரோயல் மின்ட்’ நிறுவனம் வெளியிடவுள்ளது.
‘இது பொதுமக்கள் தங்கள் மாற்றத்தில் வரலாற்றின் ஒரு பகுதியைக் கண்டறிய அனுமதிக்கும்’ என்று ரோயல் மின்ட்டின் ரெபேக்கா மோர்கன் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நாணயம், ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட 50 பென்ஸைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த 50 பென்ஸ் நாணயத்தில் மன்னர் சார்லஸ் முகம் இடது பக்கம் பார்த்தபடி உருவாக்கப்பட்டுள்ளது.
மறைந்த அவரது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களில் அவரது முகம் வலது பக்கம் பார்த்தப்படி உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.